அனைத்து செல்போன்களுக்கும் இனி ஒரே சார்ஜர் - ஆராய நிபுணர் குழு அமைப்பு!1855792980
அனைத்து செல்போன்களுக்கும் இனி ஒரே சார்ஜர் - ஆராய நிபுணர் குழு அமைப்பு!
அனைத்து விதமான மின்னணு சாதனங்களுக்கும் ஒரே சார்ஜரை பயன்படுத்துவது குறித்து ஆராய நிபுணர் குழு ஒன்றை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஆண்ட்ராய்டு போன், ஐபோன், டேப்லேட், லேப்டாப் போன்ற ஒவ்வொரு மின்னணு சாதனத்துக்கும் ஒவ்வொரு சார்ஜரை பயன்படுத்த வேண்டிய சூழல் தற்போது உள்ளது. இதனால் நுகர்வோர்களுக்கு கூடுதல் செலவாவதுடன், மின்னணு கழிவுகளும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில், அனைத்து வகை மின்னணு சாதனங்களுக்கும் ஒரே வகை சார்ஜரை (டைப் சி) கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட தொடங்கி உள்ளது. ஏற்கனவே ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இத்தகைய திட்டத்துக்கான கொள்கை வகுக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவிலும் இதன் சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும் என்றும் மத்திய அரசு தொழிலதிபர்களிடம் கேட்டுக்கொண்டது
இதன் தொடர்ச்சியாக, நுகர்வோர் விவகாரத் துறை செயலர் ரோகித் குமார் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒரே வகை சார்ஜரை கொண்டுவருவது குறித்து ஆராய நிபுணர்கள் குழு ஒன்று அமைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பேசிய ரோகித் குமார் சிங், ''சார்ஜர் தயாரிப்பில் இந்தியாவுக்கு முக்கியமான இடம் உள்ளது. அனைத்து சாதனங்களுக்கும் ஒரே ஒரு சார்ஜரை தயாரிப்பது குறித்த இறுதி முடிவை எடுப்பதற்கு முன், தொழில்துறையினர், வாடிக்கையாளர்கள், உற்பத்தியாளர்கள் என அனைவரது கருத்துக்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அதே நேரத்தில் மின்னணு கழிவு பிரச்னைகளை தீர்க்க வேண்டிய அவசியத்தை ஏற்றுக் கொண்டனர்'' என்று அவர் கூறினார். இந்த கூட்டத்தில் மின்னணு சாதனங்களின் உற்பத்தியாளர்கள், துறை சார்ந்த சங்கங்கள், தொழில்நுட்ப அமைப்புகள் மற்றும் தொழிலதிபர்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment